மனித வாழ்க்கை என்பது துவக்கப்புள்ளி மற்றும் முற்றுப்புள்ளிகளால் ஆனதொரு வாக்கியம்.... ஒவ்வொரு முற்றுப்புள்ளியும் அடுத்த வாக்கியதிற்கான துவக்கப்புள்ளி... அப்படிப்பட்ட ஒரு துவக்கப்புள்ளி இங்கே....
துவக்கப்புள்ளி..!!!!
எனக்கும் தேநீர் கோப்பைக்குமான
இடைவெளி குறைவு தான்...
பட்டென்று நுழைகிறாள்
அந்த இடைவெளியில்......
தேநீர் கொட்டிவிடும்
என்னும் பதட்டத்தை,
கன்னத்தோடு கன்னம்
இழையோடும் அவளது
பாவனை உடைத்து விடுகிறது...
“ஐயோ..!!! சுடுகிறது “ என
எட்டிப்பிடிக்கிறாள் என்னை....
தேநீர் கோப்பைக்கும்
அவளுக்குமான இடைவெளி
எங்கள் நெருக்கத்திற்கான அழைப்பிதழ்....
கைப்பிடித்து இழுக்கிறாள்...
எங்கெனக் கேட்டால்,
வாய் பொத்தி சிரிக்கிறாள்...
அந்த சிரிப்புக்கே , அவள்
இழுப்புக்கெல்லாம் போகலாம்....
முற்றத்தில் மழையில்
நனைந்தபடி மௌனியாய் நான்....
அவளோ கால் முளைத்த
பூவாய் கண்ணாமூச்சி ஆடுகிறாள்
மழையோடு,....
என் மேல் விழும் ஒவ்வொரு
மழைத்துளியும் சொல்கிறது...
மேகத்துக்கும் மழைதுளிக்குமான
பிரிவு, பூமிக்கும் மழைக்குமான
சந்திப்பின் அச்சாரம் என்று....
நானும் உனக்கொன்று
சொல்கிறேன்...
உனக்கும் எனக்குமான பிரிவு,
எப்போதும் முற்றுப்புள்ளியன்று...
நம் நினைவலைகளின்
துவக்கப்புள்ளி...!!!!!
- - ஷோபனா கோபாலகிருஷ்ணன்

there is some unique style and loneliness in your poems by minnal
ReplyDeletemay be... :-p
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete