Tuesday, 3 September 2019

வாழ்க்கைப் பயணம் - I




அழகியலும் புரிதலும் !!!


ரொம்ப நாட்களாக என்னுடைய மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு முக்கியமான விஷயத்தை இங்க சொல்லிருக்கேன்... வாழ்க்கையைப் பற்றிய ஒரு சின்ன விஷயம்... இது ஆண்கள் மட்டுமோ, பெண்கள் மட்டுமோ படிக்க வேண்டிய பதிவு அல்ல... மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பதிவு... பிழை இருந்தால் மன்னிக்கவும்...  
  
“இந்த உலகத்துலேயே ரொம்ப அழகான விஷயம் எது?” – இந்த கேள்வியை உங்களிடம் கேட்டிருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி இருப்போம். என்னிடமிருந்து வந்த பதில் “பெண்”. இந்த பதிலைக் கேட்டதும் சுற்றி இருந்த எல்லார் (பெண்கள் உட்பட) கண்களிலும் ஒரு ஏளனம். “ இவளுக்கு பெண் அப்டிங்கற திமிர், பெண்கள்னா பெரிய இதுன்னு நெனைப்பு” என்பது அவர்கள் அனைவரது பார்வையிலும் வெளிப்படையாக தெரிந்தது. அவர்கள் அனைவரும் சேர்ந்து என்னிடம் சொன்ன விஷயம் “இந்த உலகத்துலேயே ரொம்ப அழகான விஷயம் இயற்கை”. நிச்சயமா.... இயற்கை அழகு தான்... இயற்கை படைத்த பெண்ணும் அழகு தான். (உங்களுக்கு சந்தேகம் இருந்தால் googleல் beauty என்று type செய்து image பகுதியில் பார்க்கவும் 😉).
ஆனா இது எல்லாத்தையும் தாண்டி, நான் சொல்ல வர்ற இன்னொரு விஷயம் மற்றவர்களோட கருத்துக்களை ஏற்கும் பக்குவம். Normal ஆ examல கேட்குற ஒரு question க்கு, classல இருக்க ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு என்ன புரிஞ்சதோ அத தான் பதிலா எழுதுவாங்க.... நம்ம lifeல நம்ம கிட்ட யார் கேள்வி கேட்டாலும் இதே method தான். நமக்கு புரிஞ்சதத்தான் சொல்லுவோம். ஒரு விஷயத்தப்பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்... நம்ம கருத்தோட ஒத்துப் போகல அப்படின்றதுக்காக அவங்களோட கருத்து தப்பு, அவங்களுக்கு அறிவில்ல  அப்படின்னு சொல்ல முடியாது . அவங்கள ஏளனமா பாக்குறத நிறுத்திட்டு, “அது அவங்களோட கருத்து” என்பதை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்துக்கு வாங்க....
அடுத்த முக்கியமான விஷயம், அழகு - இயற்கை, ஆண், பெண், குழந்தை, சிரிப்பு, பட்டாம்பூச்சி இப்படி நிறைய விஷயம் இருக்கு அழகுனு சொல்ல...  அழகுன்றது நாம பாக்குற பார்வையில இல்ல. நாம புரிஞ்சுகுறதுல தான் இருக்கு... சூரிய உதயத்தைக் கூட ஒழுங்கா பாக்காம, 24 மணி நேரமும் குடும்பத்துக்காக உழைக்குற ஒரு ஆணுக்கு, அவன் குழந்தையோட சிரிப்பும் குடும்பத்தோட மகிழ்ச்சியும் தான் அழகா தெரியும். இனிமேல் இவன் தான் தன்னோட lifeனு நம்பி வந்த பெண்ணிடம் ஒரு ஆண் அவளோட அம்மா, அப்பாவை விட அதிக அன்பு காட்டுனா, அந்த பொண்ணுக்கு அந்த ஆண் தான் அழகானவனாத் தெரிவான். தன்னுடைய மனைவி பிரசிவிக்கும் பொழுது நேரில் பார்த்த ஆண்களுக்கு பெண்மை தான் அழகாகத் தெரியும். நிறைய travel பண்றவங்க, road trip போறவங்க கிட்ட கேட்ட இயற்கை தான் அழகுனு சொல்லுவாங்க...
என்னுடைய பதிலான “பெண்” என்பதும் என்னுடைய புரிதலினால் வந்த பதில் தான். எல்லாருக்குமே அம்மானா special தான். அதே மாதிரி தான் எனக்கும். நான் அதிகமாக என்னோட அம்மாவை பாத்து தான் வளர்ந்தேன். பாக்குறதுக்கு ரொம்ப சாதரணமா தான் இருப்பாங்க.. ஆனா அவங்க உருவத்துக்கும் மன உறுதிக்கும் சம்பந்தமே கிடையாது. நான் பார்த்த உறுதியான பெண்கள்ல இவங்களுக்கு தான் முதலிடம். அவங்க lifeல சந்தோசமா இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்... ஆனா ஒரு தடவை கூட மனசு தளர்ந்து பேசுனது கிடையாது... என்னோட role model யார்னு கேட்ட எப்பவுமே அம்மாவ தான் சொல்லுவேன்.. உண்மைய சொல்லனும்னா நான் அவங்க அளவுக்கு மனசளவுல உறுதியான ஆள் கிடையாது.... ஒவ்வொரு தடவையும் lifeல பெரிய அடி வாங்கும் போது, எனக்கு ஆறுதலா இருந்து, அத விட்டு நான் எப்படி வெளில வரணும்னு கத்து கொடுப்பாங்க... இத்தனை வருடங்கள் ஆனா பிறகும், இன்னும் நான் அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துகிறேன்… அவங்க தோல் சுருங்கி, முடி நரைச்சு,  வயசான பிறகு, இப்பவும் என் கண்ணனுக்கு அழகா தான் தெரியுறாங்க... “பெண்”- இந்த வார்த்தையைக் கேட்குறப்போ என் mind ல நான் நியாபகத்துக்கு வந்தது இல்ல. என்னோட அம்மா தான் இப்ப வரைக்கும் நியாபகத்துக்கு வருவாங்க..... ஆமா.. அவங்க அழகு தான். என்னுடைய பதில் தப்பாவோ, முட்டாள்தனமாவோ தெரிஞ்சாலும், எப்பவுமே அதே பதில் தான்.
இதே போல அதிகமா அப்பாவோட அரவணைப்புல, சகோதர பாசத்துல வளர்ந்த பொண்ணுங்க கிட்ட கேட்ட, யோசிக்காம ஆண் தான் அழகுனு சொல்லுவாங்க. இந்த உலகத்துல ஒவ்வொரு விஷயமும் அழகு தான், ஒவ்வொருத்தரும் அழகு தான். நம்மளோட பார்வை, புரிதல் இது மட்டும் தான் வேற வேற... மத்தவங்க போடுற dress, makeup, பேசுற விதம், அவங்க attitude இதெல்லாம் தாண்டி, அவங்கள புரிஞ்சுக்க try பண்ணுங்க... இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.. ஆனா try பண்ணுங்க....உங்கள சுத்தி எல்லாமே அழகா தெரியும்... அழகு தேட வேண்டிய ஒன்றல்ல... புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.....🙏🙏🙏🙏🙏

-   ஷோபனா கோபாலகிருஷ்ணன்


Saturday, 4 February 2017

உலகமெனும் பொய்யுருண்டை...... !!!!!!


“இவள் உன்னைப்போலவே
இருக்கிறாள் “ என்ற
முதல் பொய்யில் தொடங்குகிறது
என்னுடைய பிரவேசம்
இவ்வுலகில்....

“நிலவில் பாட்டி இருக்கிறாள்”
என்ற அடுத்த பொய்யில்
உருண்டோடுகிறது ,
ஒரு கவளச் சோறு,
தொண்டைக்குழி தாண்டி....

“அன்னமிட்டால் குட்டி
ஈனும்” என்ற
தொடர்ச்சியான பொய்யில்
மயில் இறகு வளர்க்கப்படுகிறது
என் புத்தகப் பொதியில்....

“நன்றாக” ஆடுகிறாய், பாடுகிறாய்,
எழுதுகிறாய் என்ற
பொய்யின் நம்பிக்கையில்
தொடர்கிறது நம்முடைய
அடுத்த முயற்சிகள்....

விழித்திரையில் வண்ணக்கோலமிட்டு
காட்சி மாறும் திரைப்படம் கூட
பொய்யென அறிய
பதினைந்து வருடம் பிடித்தது
எனக்கு....

சரியான பொய் தவறல்ல,
நம்பிக்கையான பொய் தளர்ச்சியல்ல,
காப்பாற்றும் பொய் கைவிடுவதற்கல்ல,
மகிழ்ச்சியான பொய் துக்கமல்ல,
ஆனால், பொய் நிலையானதுமல்ல.....

அதனால் தானோ உலகம்
நிதமும் நிலைகொள்ளாமல்
சுழல்கின்றது...???
ஆம்... நம் உலகம் பொய்யால் ஆனது...
நாம் அதன் துணுக்குகள்...

பொய்களை நமக்குள் புதைத்து விட்டு ,
இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா
உண்மைகளை தன்னுள் மறைத்து
விளையாட்டுக் காட்டுகிறது,
உனக்கும் எனக்கும்....

தேடாமலே பொய்கள்
இங்கு வாரி வழங்கப்படும்....
தேடினாலும் புலனுக்கு
எட்டா ஒன்றாய்
உண்மை மறைக்கப்படும்.....

மானிடா,
ஒரே ஒரு உண்மை சொல்..
“நீ யார்?” – விடை உன் பெயரல்ல..
 உன் பெயர்கூட பொய்தான்....
அது நீயன்று....

உலகமெனும் பொய்யுருண்டையின்
நகைப்பொலி கேட்கிறதா...??
விரைந்திடு விடை காண...
இல்லையேல்,
நீயும் எளிதில் கிடைக்கும்
பொய்யாக மாற்றப்படுவாய்....

-          -ஷோபனா கோபாலகிருஷ்ணன்




Friday, 3 February 2017

காதல் தொலைந்துவிட்டது.......!!!!!



மகா ஜனங்களே...!!!
காதல் தொலைந்துவிட்டது.....
கண்டுபிடிப்பவர்களுக்குச்
சன்மானமாக மகிழ்ச்சி
வழங்கப்படும்.....

அறிவிப்பு அலையாய் பரவ
தேடத் தொடங்குகிறான்
இளைஞனவன்....
காதலியுடனான தன் காதலை
மதுபானக்குப்பிக்குள்.....

பொதிந்து வைத்த பொம்மைக்குள்
தேடிக்கொண்டிருகிறது
குழந்தை...
தனக்கும் தந்தைக்குமான
காதலை....

கவிஞனோ,
முற்றுபெறா எழுத்துக்களின்
இடைவெளியில் தேடுகிறான்,
இலக்கியக் காதலை.....

எரிந்து கொண்டிருந்த
மதுரையின் தீக்கற்றையில்
தேடிக்கொண்டிருந்தாள் கண்ணகி....
மாதவிக்குத் தாரைவார்க்கப்பட்ட
கோவலனின் காதலை....

ஊரே காதலைத் தேட
நானோ ஊரடங்கு உத்தரவாய்
சப்தநாடி ஒடுக்குகிறேன்...
வருடக் கணக்கில்
தேடிவிட்ட களைப்பில்....

சஞ்சலத்தில் சல சலக்கும்
மனதை ,
சிதையில் ஏற்றிவிடாமல்
மீண்டும் தேடத்தொடங்குகிறேன்....

ஊடுருவி என்னைத் தாக்கும்
அவன் கண்களின் ஒளியில்,
அவனது கடையிதழ் சிரிப்பில்,
முறுக்கிவிடும் அவன் மீசை முடியில்,
கரம் பிடித்து சாலை கடக்கும்
அவனது சிறு தொடுதலில்,
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
அவனுள் தினம் தொலைந்துகொண்டிருக்கும்
என் காதலை....

காதலே,
எட்டிப் பார்த்துவிடு...
கெடு முடிவதற்குள்...
இல்லையென்றால் ,
அவனும் தொலையக்கூடும்
ஒருநாள்.....
என்னை விட்டு......

-     -ஷோபனா கோபாலகிருஷ்ணன்

Monday, 3 June 2013

துவக்கப்புள்ளி...!!!!


மனித வாழ்க்கை என்பது துவக்கப்புள்ளி மற்றும் முற்றுப்புள்ளிகளால் ஆனதொரு வாக்கியம்.... ஒவ்வொரு முற்றுப்புள்ளியும் அடுத்த வாக்கியதிற்கான துவக்கப்புள்ளி... அப்படிப்பட்ட ஒரு துவக்கப்புள்ளி இங்கே....

துவக்கப்புள்ளி..!!!!




எனக்கும் தேநீர் கோப்பைக்குமான
இடைவெளி குறைவு தான்...
பட்டென்று நுழைகிறாள்
அந்த இடைவெளியில்......

தேநீர் கொட்டிவிடும்
என்னும் பதட்டத்தை,
கன்னத்தோடு கன்னம்
இழையோடும் அவளது
பாவனை உடைத்து விடுகிறது...

“ஐயோ..!!! சுடுகிறது “ என
எட்டிப்பிடிக்கிறாள் என்னை....
தேநீர் கோப்பைக்கும்
அவளுக்குமான இடைவெளி
எங்கள் நெருக்கத்திற்கான அழைப்பிதழ்....

கைப்பிடித்து இழுக்கிறாள்...
எங்கெனக் கேட்டால்,
வாய் பொத்தி சிரிக்கிறாள்...
அந்த சிரிப்புக்கே , அவள்
இழுப்புக்கெல்லாம் போகலாம்....

முற்றத்தில் மழையில்
நனைந்தபடி மௌனியாய் நான்....
அவளோ கால் முளைத்த
பூவாய் கண்ணாமூச்சி ஆடுகிறாள்
மழையோடு,....

என் மேல் விழும் ஒவ்வொரு
மழைத்துளியும் சொல்கிறது...
மேகத்துக்கும் மழைதுளிக்குமான
பிரிவு, பூமிக்கும் மழைக்குமான
சந்திப்பின் அச்சாரம் என்று....

நானும் உனக்கொன்று
சொல்கிறேன்...
உனக்கும் எனக்குமான பிரிவு,
எப்போதும் முற்றுப்புள்ளியன்று...
நம் நினைவலைகளின்
துவக்கப்புள்ளி...!!!!!

-   - ஷோபனா கோபாலகிருஷ்ணன்

Sunday, 14 April 2013

தாயுமானவள்!!!..

வலி என்பது  ஒரு பெண்ணுக்கு இரண்டு  விஷயங்களில் மட்டுமே சுகமானது... அந்த சுகமான ஒரு வலி இங்கே.. உங்கள் பார்வைக்கு.....

தாயுமானவள்!!!....




விழிகளில் வழிந்தோடும்
கண்ணீர்த் துளி வற்றும் முன்னே
அடுத்தக் கண்ணீர் துளிக்கான
விண்ணப்பம் வந்து
நிற்கிறது......


விண்ணப்பத்தைத் தவிர்த்துவிடும்
அரசியல்வாதியைப் போல்
ஓட நினைக்கிறது மனம்...
ஆனால் விண்ணப்பமோ
வலிய வந்து விழிகளைத் தழுவுகிறது....


கோடைமழை கூட
பொய்த்து விடும்...
விழிகளின் கண்ணீர்
பொய்த்ததில்லை....
ஒவ்வொரு துளியும்
உனக்காக என்பதினால்....


‘நான்’ என்னும் கர்வத்தை
விடச் சொன்னார்கள்...
‘என்’னையே விட்டுவிட்டேன்...
‘நீ’ என்கின்ற கருவினை
எடுத்துக்கொள்ள.....


அனுமதி கேட்டு உள்ளே வர
காதல் ஒன்றும் வேறுதேசமன்று..
என்னுடைய சொந்த தேசம்...
அதனால் தானோ என்னவோ .,
உன்னிடமும் அனுமதி கேட்கவில்லை.,
உன்னைக் காதலிக்க.....


கங்கை நதி வற்றியதாக
சரித்திரமில்லை...
உனக்கான என் கண்ணீர் துளி
வற்றியதாகச் சொல்லும்
காதலுமில்லை...


பத்து மாதம் உன்னைக் கருவில்
சுமப்பவள் தாய்...
பத்து நொடி கூட விடாமல்
உன்னை மனதில் சுமப்பவள்-
தாயுமானவள்!!!!....


காதலிப்பது சுகமெனில்,
வலியைக் காட்டும் விழியால்
உனக்காக காத்திருப்பதும் சுகமே...
இப்படிக்கு
உன்னை மனதில் சுமக்கும் தாயுமானவள்.....

-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.

Wednesday, 20 March 2013

காலச்சக்கரம்-II


இக்கதையில் வரும் இளைய பல்லவன் என்கின்ற கதாபாத்திரம் தவிர மற்றவை அனைத்தும் கற்பனையே...

காலச்சக்கரம்-பகுதிII



முதல் சாமம் முடிந்து இரண்டாவது சாமம் தொடங்கும் வேளை.... இளைய பல்லவனும், அருள்மொழித்தேவனும் நகர்வலம் செல்ல மாறுவேடம் தரித்துக் கொண்டிருந்தனர்...

“ பல்லவரே.... தூதுப் புறா கொண்டு வந்த செய்தி உண்மையே.... ஒற்றர்கள் இருவர் நுழைந்து விட்டனர்....” அவசரமாக சொல்லிக் கொண்டே அறையினில் நுழைந்தான் ராஜாந்திரி...

“ அவர்களை பிடித்தாகி விட்டதா???”

“ஆம் பல்லவரே... அவர்கள் இருவரும் என்னுடைய பாதுகாப்பில் தான் இருக்கிறார்கள்... கோட்டைத் தலைவனுக்கு தெரியாமலிருக்கவே என்னுடைய பாதுகாப்பில் வைத்துள்ளேன்.. வேளை வரும் பொழுது ரகசியமாக இங்கே அழைத்து வருவதாய் உத்தேசம்..”

பலமாக சிரித்துக் கொண்டே ஆசனத்தில் அமர்ந்தான் இளைய பல்லவன்.. அருள்மொழித்தேவனுக்கும் ராஜாந்திரிக்கும் பல்லவன் ஏன் நகைக்கிறான் என்று புரியவில்லை.... அருள்மொழித்தேவன் கோபத்துடனே கேட்டான்.

“ பல்லவரே... ஏன் நகைக்கிறீர்??? ராஜாந்திரி கூறிய செய்தி எவ்வளவு முக்கியமான ஒன்று... இது எங்களை அவமதிப்பது போல் அல்லவா உள்ளது...”

“கோபம் கொள்ளாதே அருள்மொழித்தேவா... நீங்கள் ஒற்றர்களை பிடித்த செய்தி எனக்கு முன்பே கோட்டைத்தலைவனுக்கு தெரிந்திருக்கும்....”

அருள்மொழித்தேவனும் ராஜாந்திரியும் வியப்பின் எல்லையை அடைந்தனர்.
ராஜாந்திரி தான் முதலில் வியப்பிலிருந்து விடுபட்டு, பல்லவனிடன்
தனது ஐயத்தைக் கேட்டான்.

“ எவ்வாறு தெரியும் பல்லவரே?? நான் அனைத்து காரியங்களையும் ரகசியமாக அல்லவா செய்து வருகிறேன்...”

பல்லவன் மீண்டும் நகைத்துவிட்டு வினவினான்..

“நான் உங்களிருவரையும் இன்று மாலை அழைத்து கோட்டைப் பாதுகாப்பைப் பற்றி ஏன் கேட்டேனென்று தெரியுமா???”

இருவரும் கேள்வியுடன் பல்லவனை நோக்க, பல்லவன் தொடர்ந்தான்.

“கோட்டைத்தலைவனுடைய வீரர்கள் காட்டுப்பகுதியில் ஒற்றர்கள் உலவுவதாக கொண்டு வந்த செய்தியின் காரணமாகவே உங்களை அழைத்தேன்.... அதற்குள் புறாவும் தூது கொண்டு வந்து செய்தியை உறுதிப்படுத்திவிட்டது.... இப்பொழுது புரிகிறதா?? கோட்டைத்தலைவனின் வீரர்கள் உங்களை விட விரைவாக இருக்கிறார்கள்...  நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக அவசியம்”

“ அப்படியானால் நாம் அந்த ஒற்றர்களை கோட்டைத்தலைவன் வசம் ஒப்படைக்க வேண்டிவருமே??”

“ கவலைப்படாதே ராஜாந்திரி.... அவர்கள் உன் ரகசிய பாதுகாப்பில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை... அவர்களை எங்கே வைத்திருக்கிறாய்????”

“கடற்புறமுள்ள என்னுடைய குடிசை ஒன்றில் பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறேன்.. அக்குடிசை ஒதுக்குப்புறமாக இருப்பதால் அவர்கள் அங்கே இருக்கும்வரை யாரும் சந்தேகப்பட வாய்ப்பில்லை... “

 “நல்லது.... அவர்களைப் பற்றி ஏதேனும் தெரிந்ததா??? அவர்களிடம்  ஏதாவது விசாரித்தாயா???”

“ அவர்கள் இருவரும் ஆண் ஒற்றர்கள்....அவர்களைப் பார்த்தால் மிகவும் விசித்திரமாக இருக்கிறது பல்லவரே.... உலகம் முழுவதும் சுற்றிய எனக்கே அவர்கள் எந்நாட்டவர் என்று உகிக்க முடியவில்லை... அவர்களது ஆடை, அணிகலன்களை வைத்தாவது கண்டறியலாம் என்றால் அவையும் விசித்திரமாகவே உள்ளன... அவர்களிடம் விசாரித்த போது ஒருவன் மட்டுமே பேசினான்.. அவன் எம்மொழியில் பேசுகிறான் என்றும் விளங்கவில்லை... அவர்களிடம் ஓலை ஏதேனும் இருக்கிறதா என்று சோதித்தும் பார்த்தாகிவிட்டது.... அப்படி எதுவும் இல்லை.. அவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்???, அவர்கள் நோக்கம் என்ன ?? என்று எதுவும் என்னால் அறிய முடியவில்லை.... மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன் பல்லவரே... ஆனால் அவர்களிடமிருந்து இது மட்டுமே கிடைத்தது” என ராஜாந்திரி பையை திறந்து காட்டினான்.

அதைப் பார்த்ததும் சிந்தனையில் ஆழ்ந்த பல்லவன், அருள்மொழித்தேவன் மற்றும் ராஜாந்திரியை நோக்கி,

“ மூன்றாம் சாமம் தொடங்குவதற்கான அறிகுறிகள் வந்துவிட்டன.... கிளம்புங்கள் என்னுடன்.... ராஜாந்திரி .,நீ தான் எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்....ம்.. ஆகட்டும்” என்றான்....

நகர்வலம் செல்ல ஆடை புனைந்த பல்லவன், விதி அவனுக்கு புனையப் போகும் கட்டுகளை அறியாமல் கிளம்பினான்....

------------------------------------------------------------------------------------------------------------

“ஏம்மா கயல், உனக்கு இங்கிலீஷ் லாம் பேச தெரியுமா???? சும்மா பிச்சு உதர்ற!!! இத்தனை வருசமா குடும்பம் நடத்துறேன்.. என் கிட்ட கூட சொல்லலியே...”

கயல் முறைத்துப் பார்த்தாள்... “ பயத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன்... அதுக்கென்ன இப்ப...”

“பயம் வந்த எல்லாரும் தாய்மொழில தானா பேசுவாங்க???நீ என்னடானா, ‘I m kayalvizhi, he is my husband . His name is mathiyazhagan. He is working as a software engineer, I m a homemaker ,our native is tamilnadu’ னு ஒரு paragraph ஆ யே பேசி முடிசுட்டியே, இது என்ன Introduce yourself ஆ??!!!”

“கழுத்துல கத்தி வச்ச எல்லா மொழியும் வரும்... நானாவது இங்கிலீஷ்ல உலர்னேன்.... நீங்க என்ன சார் பண்ணுனீங்க??? “க க க க” னு கத்திய கழுத்துல இருந்து எடுக்குற வரைக்கும் உலர்னியே.... மறந்து போச்சா??? ”

“அது சும்மா ... அந்த டைம்ல வார்த்தை வரல.... இதெல்லாம் ஒரு மேட்டரா...”

“ சரி , கொஞ்ச நேரம் வாய மூடு.. அந்த மொட்டத் தலை இங்கயே பாக்குது...”

“உத்தரவு மகாராணி”

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” தலையில் அடித்து கொண்டாள்...

நேரம் போய்க்கொண்டே இருந்தது.... நான் பாத்த அதே குடிசையில கடைசில உட்கார வச்சுட்டானே இவன் ... இவனை நம்பி இனிமேல் எங்கயும் வரக்கூடாது.. மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டாள்.... கயல்விழிக்கு ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்து இருப்பது எரிச்சலாக இருந்தது... அந்த இடத்தை விட்டு போகவும் முடியாது... யாருடனாவது பேசினால் தேவலை என்றிருந்தது. யாருடன் பேச முடியும்.. கூட்டி வந்தவனைத் தவிர வேறு யாரும் இல்லை பேசுவதற்கு...

“மதி..” மெதுவாக அழைத்தாள்.

“ம்...”

“எனக்கு ரொம்ப போர் அடிக்குது...”

“அதுக்கு...”

“ஏதாவது பேசு..”

“எனக்கு தூக்கம் வருது..”

“அது எப்படிடா சாகுற நிலைமையிலும் தூக்கம் வருதுன்னு சொல்ற...”

“நடு ராத்திரில எவன்ட்ட கேட்டாலும் இத தான் சொல்லுவான்...”

“சரி... எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த??? கட்டாயம் ரீசன் இருக்கும்”

“நீ ரொம்ப யோசிக்குற.. சரி சொல்றேன்... எல்லாம் ஒரு முக்கியமான காரணமா தான்...”

“அதான் , என்ன காரணம்?”

“உனக்கு சுத்த தமிழ்ல நல்ல பேச வரும்.... எனக்கு வராது.. அதுக்கு தான் கூட்டிட்டு வந்தேன்... ஆனா இங்க opposite ஆ நடக்குது.. உன் வாய்ல இருந்து மருந்துக்குக் கூட ஒரு தமிழ் வார்த்தைய  அவன் கிட்ட பேசல... எவ்வளோ careful ஆ இருக்க.. எல்லாம் என் நேரம்”

“சரி , விடு... நெக்ஸ்ட் டைம் கலக்கிடுறேன்... நான் பேசுற தமிழ கேட்டு அவன் ஷாக்  ஆகுறானா இல்லையா னு பாரு... 
“
“ ஷாக் ஆகுறானோ இல்லையோ , மறுபடியும் கழுத்துல கத்தி வைக்காம இருந்த சரி...”

“எனக்கு ஒரு டவுட் மதி...”

‘இந்த பொண்ணுங்க கேள்வி மட்டும் நல்ல கேட்குறாங்க.. பதில் சொல்றது எவ்வளோ கஷ்டம்னு எங்களுக்கு தானா தெரியும்...’-மதியின் mind voice விட்டால் வெளியில் கேட்டிருக்கும்... இருந்தாலும்  அடக்கி வாசித்தான்.. இங்கிருந்து தப்பிக்க கயல் தான் உதவ வேண்டும், வேறு வழி இல்லை..

“என்ன கயல்????”

“நாம எப்படி இங்க வந்தோம்???? அதுவும் கார்ல உட்காந்த 10 நிமிஷத்துல எப்படி வந்தோம்???? என்ன டகால்டி வேலை பண்ணுன???”

“ஏய்... என்ன... சென்னை slang ல பேச ஆரம்பிச்சுட்ட... டகால்டி னா என்ன???”

“நான் உன் கிட்ட டவுட் கேட்ட நீ என் கிட்ட கேட்குறியா... first  நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

மதி சொன்னதைக் கேட்க கேட்க கயல்விழிக்கு ஒன்று மட்டும் புரிந்தது... இங்கிருந்து தப்பிக்க வேண்டுமெனில், இனி விளையாட வேண்டியது விதி அல்ல.. தான் தான் என்று...  

சக்கரம் சுழலும்..!!!!
-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.