Monday, 3 June 2013

துவக்கப்புள்ளி...!!!!


மனித வாழ்க்கை என்பது துவக்கப்புள்ளி மற்றும் முற்றுப்புள்ளிகளால் ஆனதொரு வாக்கியம்.... ஒவ்வொரு முற்றுப்புள்ளியும் அடுத்த வாக்கியதிற்கான துவக்கப்புள்ளி... அப்படிப்பட்ட ஒரு துவக்கப்புள்ளி இங்கே....

துவக்கப்புள்ளி..!!!!




எனக்கும் தேநீர் கோப்பைக்குமான
இடைவெளி குறைவு தான்...
பட்டென்று நுழைகிறாள்
அந்த இடைவெளியில்......

தேநீர் கொட்டிவிடும்
என்னும் பதட்டத்தை,
கன்னத்தோடு கன்னம்
இழையோடும் அவளது
பாவனை உடைத்து விடுகிறது...

“ஐயோ..!!! சுடுகிறது “ என
எட்டிப்பிடிக்கிறாள் என்னை....
தேநீர் கோப்பைக்கும்
அவளுக்குமான இடைவெளி
எங்கள் நெருக்கத்திற்கான அழைப்பிதழ்....

கைப்பிடித்து இழுக்கிறாள்...
எங்கெனக் கேட்டால்,
வாய் பொத்தி சிரிக்கிறாள்...
அந்த சிரிப்புக்கே , அவள்
இழுப்புக்கெல்லாம் போகலாம்....

முற்றத்தில் மழையில்
நனைந்தபடி மௌனியாய் நான்....
அவளோ கால் முளைத்த
பூவாய் கண்ணாமூச்சி ஆடுகிறாள்
மழையோடு,....

என் மேல் விழும் ஒவ்வொரு
மழைத்துளியும் சொல்கிறது...
மேகத்துக்கும் மழைதுளிக்குமான
பிரிவு, பூமிக்கும் மழைக்குமான
சந்திப்பின் அச்சாரம் என்று....

நானும் உனக்கொன்று
சொல்கிறேன்...
உனக்கும் எனக்குமான பிரிவு,
எப்போதும் முற்றுப்புள்ளியன்று...
நம் நினைவலைகளின்
துவக்கப்புள்ளி...!!!!!

-   - ஷோபனா கோபாலகிருஷ்ணன்

Sunday, 14 April 2013

தாயுமானவள்!!!..

வலி என்பது  ஒரு பெண்ணுக்கு இரண்டு  விஷயங்களில் மட்டுமே சுகமானது... அந்த சுகமான ஒரு வலி இங்கே.. உங்கள் பார்வைக்கு.....

தாயுமானவள்!!!....




விழிகளில் வழிந்தோடும்
கண்ணீர்த் துளி வற்றும் முன்னே
அடுத்தக் கண்ணீர் துளிக்கான
விண்ணப்பம் வந்து
நிற்கிறது......


விண்ணப்பத்தைத் தவிர்த்துவிடும்
அரசியல்வாதியைப் போல்
ஓட நினைக்கிறது மனம்...
ஆனால் விண்ணப்பமோ
வலிய வந்து விழிகளைத் தழுவுகிறது....


கோடைமழை கூட
பொய்த்து விடும்...
விழிகளின் கண்ணீர்
பொய்த்ததில்லை....
ஒவ்வொரு துளியும்
உனக்காக என்பதினால்....


‘நான்’ என்னும் கர்வத்தை
விடச் சொன்னார்கள்...
‘என்’னையே விட்டுவிட்டேன்...
‘நீ’ என்கின்ற கருவினை
எடுத்துக்கொள்ள.....


அனுமதி கேட்டு உள்ளே வர
காதல் ஒன்றும் வேறுதேசமன்று..
என்னுடைய சொந்த தேசம்...
அதனால் தானோ என்னவோ .,
உன்னிடமும் அனுமதி கேட்கவில்லை.,
உன்னைக் காதலிக்க.....


கங்கை நதி வற்றியதாக
சரித்திரமில்லை...
உனக்கான என் கண்ணீர் துளி
வற்றியதாகச் சொல்லும்
காதலுமில்லை...


பத்து மாதம் உன்னைக் கருவில்
சுமப்பவள் தாய்...
பத்து நொடி கூட விடாமல்
உன்னை மனதில் சுமப்பவள்-
தாயுமானவள்!!!!....


காதலிப்பது சுகமெனில்,
வலியைக் காட்டும் விழியால்
உனக்காக காத்திருப்பதும் சுகமே...
இப்படிக்கு
உன்னை மனதில் சுமக்கும் தாயுமானவள்.....

-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.

Wednesday, 20 March 2013

காலச்சக்கரம்-II


இக்கதையில் வரும் இளைய பல்லவன் என்கின்ற கதாபாத்திரம் தவிர மற்றவை அனைத்தும் கற்பனையே...

காலச்சக்கரம்-பகுதிII



முதல் சாமம் முடிந்து இரண்டாவது சாமம் தொடங்கும் வேளை.... இளைய பல்லவனும், அருள்மொழித்தேவனும் நகர்வலம் செல்ல மாறுவேடம் தரித்துக் கொண்டிருந்தனர்...

“ பல்லவரே.... தூதுப் புறா கொண்டு வந்த செய்தி உண்மையே.... ஒற்றர்கள் இருவர் நுழைந்து விட்டனர்....” அவசரமாக சொல்லிக் கொண்டே அறையினில் நுழைந்தான் ராஜாந்திரி...

“ அவர்களை பிடித்தாகி விட்டதா???”

“ஆம் பல்லவரே... அவர்கள் இருவரும் என்னுடைய பாதுகாப்பில் தான் இருக்கிறார்கள்... கோட்டைத் தலைவனுக்கு தெரியாமலிருக்கவே என்னுடைய பாதுகாப்பில் வைத்துள்ளேன்.. வேளை வரும் பொழுது ரகசியமாக இங்கே அழைத்து வருவதாய் உத்தேசம்..”

பலமாக சிரித்துக் கொண்டே ஆசனத்தில் அமர்ந்தான் இளைய பல்லவன்.. அருள்மொழித்தேவனுக்கும் ராஜாந்திரிக்கும் பல்லவன் ஏன் நகைக்கிறான் என்று புரியவில்லை.... அருள்மொழித்தேவன் கோபத்துடனே கேட்டான்.

“ பல்லவரே... ஏன் நகைக்கிறீர்??? ராஜாந்திரி கூறிய செய்தி எவ்வளவு முக்கியமான ஒன்று... இது எங்களை அவமதிப்பது போல் அல்லவா உள்ளது...”

“கோபம் கொள்ளாதே அருள்மொழித்தேவா... நீங்கள் ஒற்றர்களை பிடித்த செய்தி எனக்கு முன்பே கோட்டைத்தலைவனுக்கு தெரிந்திருக்கும்....”

அருள்மொழித்தேவனும் ராஜாந்திரியும் வியப்பின் எல்லையை அடைந்தனர்.
ராஜாந்திரி தான் முதலில் வியப்பிலிருந்து விடுபட்டு, பல்லவனிடன்
தனது ஐயத்தைக் கேட்டான்.

“ எவ்வாறு தெரியும் பல்லவரே?? நான் அனைத்து காரியங்களையும் ரகசியமாக அல்லவா செய்து வருகிறேன்...”

பல்லவன் மீண்டும் நகைத்துவிட்டு வினவினான்..

“நான் உங்களிருவரையும் இன்று மாலை அழைத்து கோட்டைப் பாதுகாப்பைப் பற்றி ஏன் கேட்டேனென்று தெரியுமா???”

இருவரும் கேள்வியுடன் பல்லவனை நோக்க, பல்லவன் தொடர்ந்தான்.

“கோட்டைத்தலைவனுடைய வீரர்கள் காட்டுப்பகுதியில் ஒற்றர்கள் உலவுவதாக கொண்டு வந்த செய்தியின் காரணமாகவே உங்களை அழைத்தேன்.... அதற்குள் புறாவும் தூது கொண்டு வந்து செய்தியை உறுதிப்படுத்திவிட்டது.... இப்பொழுது புரிகிறதா?? கோட்டைத்தலைவனின் வீரர்கள் உங்களை விட விரைவாக இருக்கிறார்கள்...  நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிக அவசியம்”

“ அப்படியானால் நாம் அந்த ஒற்றர்களை கோட்டைத்தலைவன் வசம் ஒப்படைக்க வேண்டிவருமே??”

“ கவலைப்படாதே ராஜாந்திரி.... அவர்கள் உன் ரகசிய பாதுகாப்பில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை... அவர்களை எங்கே வைத்திருக்கிறாய்????”

“கடற்புறமுள்ள என்னுடைய குடிசை ஒன்றில் பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறேன்.. அக்குடிசை ஒதுக்குப்புறமாக இருப்பதால் அவர்கள் அங்கே இருக்கும்வரை யாரும் சந்தேகப்பட வாய்ப்பில்லை... “

 “நல்லது.... அவர்களைப் பற்றி ஏதேனும் தெரிந்ததா??? அவர்களிடம்  ஏதாவது விசாரித்தாயா???”

“ அவர்கள் இருவரும் ஆண் ஒற்றர்கள்....அவர்களைப் பார்த்தால் மிகவும் விசித்திரமாக இருக்கிறது பல்லவரே.... உலகம் முழுவதும் சுற்றிய எனக்கே அவர்கள் எந்நாட்டவர் என்று உகிக்க முடியவில்லை... அவர்களது ஆடை, அணிகலன்களை வைத்தாவது கண்டறியலாம் என்றால் அவையும் விசித்திரமாகவே உள்ளன... அவர்களிடம் விசாரித்த போது ஒருவன் மட்டுமே பேசினான்.. அவன் எம்மொழியில் பேசுகிறான் என்றும் விளங்கவில்லை... அவர்களிடம் ஓலை ஏதேனும் இருக்கிறதா என்று சோதித்தும் பார்த்தாகிவிட்டது.... அப்படி எதுவும் இல்லை.. அவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்???, அவர்கள் நோக்கம் என்ன ?? என்று எதுவும் என்னால் அறிய முடியவில்லை.... மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன் பல்லவரே... ஆனால் அவர்களிடமிருந்து இது மட்டுமே கிடைத்தது” என ராஜாந்திரி பையை திறந்து காட்டினான்.

அதைப் பார்த்ததும் சிந்தனையில் ஆழ்ந்த பல்லவன், அருள்மொழித்தேவன் மற்றும் ராஜாந்திரியை நோக்கி,

“ மூன்றாம் சாமம் தொடங்குவதற்கான அறிகுறிகள் வந்துவிட்டன.... கிளம்புங்கள் என்னுடன்.... ராஜாந்திரி .,நீ தான் எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்....ம்.. ஆகட்டும்” என்றான்....

நகர்வலம் செல்ல ஆடை புனைந்த பல்லவன், விதி அவனுக்கு புனையப் போகும் கட்டுகளை அறியாமல் கிளம்பினான்....

------------------------------------------------------------------------------------------------------------

“ஏம்மா கயல், உனக்கு இங்கிலீஷ் லாம் பேச தெரியுமா???? சும்மா பிச்சு உதர்ற!!! இத்தனை வருசமா குடும்பம் நடத்துறேன்.. என் கிட்ட கூட சொல்லலியே...”

கயல் முறைத்துப் பார்த்தாள்... “ பயத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன்... அதுக்கென்ன இப்ப...”

“பயம் வந்த எல்லாரும் தாய்மொழில தானா பேசுவாங்க???நீ என்னடானா, ‘I m kayalvizhi, he is my husband . His name is mathiyazhagan. He is working as a software engineer, I m a homemaker ,our native is tamilnadu’ னு ஒரு paragraph ஆ யே பேசி முடிசுட்டியே, இது என்ன Introduce yourself ஆ??!!!”

“கழுத்துல கத்தி வச்ச எல்லா மொழியும் வரும்... நானாவது இங்கிலீஷ்ல உலர்னேன்.... நீங்க என்ன சார் பண்ணுனீங்க??? “க க க க” னு கத்திய கழுத்துல இருந்து எடுக்குற வரைக்கும் உலர்னியே.... மறந்து போச்சா??? ”

“அது சும்மா ... அந்த டைம்ல வார்த்தை வரல.... இதெல்லாம் ஒரு மேட்டரா...”

“ சரி , கொஞ்ச நேரம் வாய மூடு.. அந்த மொட்டத் தலை இங்கயே பாக்குது...”

“உத்தரவு மகாராணி”

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” தலையில் அடித்து கொண்டாள்...

நேரம் போய்க்கொண்டே இருந்தது.... நான் பாத்த அதே குடிசையில கடைசில உட்கார வச்சுட்டானே இவன் ... இவனை நம்பி இனிமேல் எங்கயும் வரக்கூடாது.. மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டாள்.... கயல்விழிக்கு ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்து இருப்பது எரிச்சலாக இருந்தது... அந்த இடத்தை விட்டு போகவும் முடியாது... யாருடனாவது பேசினால் தேவலை என்றிருந்தது. யாருடன் பேச முடியும்.. கூட்டி வந்தவனைத் தவிர வேறு யாரும் இல்லை பேசுவதற்கு...

“மதி..” மெதுவாக அழைத்தாள்.

“ம்...”

“எனக்கு ரொம்ப போர் அடிக்குது...”

“அதுக்கு...”

“ஏதாவது பேசு..”

“எனக்கு தூக்கம் வருது..”

“அது எப்படிடா சாகுற நிலைமையிலும் தூக்கம் வருதுன்னு சொல்ற...”

“நடு ராத்திரில எவன்ட்ட கேட்டாலும் இத தான் சொல்லுவான்...”

“சரி... எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்த??? கட்டாயம் ரீசன் இருக்கும்”

“நீ ரொம்ப யோசிக்குற.. சரி சொல்றேன்... எல்லாம் ஒரு முக்கியமான காரணமா தான்...”

“அதான் , என்ன காரணம்?”

“உனக்கு சுத்த தமிழ்ல நல்ல பேச வரும்.... எனக்கு வராது.. அதுக்கு தான் கூட்டிட்டு வந்தேன்... ஆனா இங்க opposite ஆ நடக்குது.. உன் வாய்ல இருந்து மருந்துக்குக் கூட ஒரு தமிழ் வார்த்தைய  அவன் கிட்ட பேசல... எவ்வளோ careful ஆ இருக்க.. எல்லாம் என் நேரம்”

“சரி , விடு... நெக்ஸ்ட் டைம் கலக்கிடுறேன்... நான் பேசுற தமிழ கேட்டு அவன் ஷாக்  ஆகுறானா இல்லையா னு பாரு... 
“
“ ஷாக் ஆகுறானோ இல்லையோ , மறுபடியும் கழுத்துல கத்தி வைக்காம இருந்த சரி...”

“எனக்கு ஒரு டவுட் மதி...”

‘இந்த பொண்ணுங்க கேள்வி மட்டும் நல்ல கேட்குறாங்க.. பதில் சொல்றது எவ்வளோ கஷ்டம்னு எங்களுக்கு தானா தெரியும்...’-மதியின் mind voice விட்டால் வெளியில் கேட்டிருக்கும்... இருந்தாலும்  அடக்கி வாசித்தான்.. இங்கிருந்து தப்பிக்க கயல் தான் உதவ வேண்டும், வேறு வழி இல்லை..

“என்ன கயல்????”

“நாம எப்படி இங்க வந்தோம்???? அதுவும் கார்ல உட்காந்த 10 நிமிஷத்துல எப்படி வந்தோம்???? என்ன டகால்டி வேலை பண்ணுன???”

“ஏய்... என்ன... சென்னை slang ல பேச ஆரம்பிச்சுட்ட... டகால்டி னா என்ன???”

“நான் உன் கிட்ட டவுட் கேட்ட நீ என் கிட்ட கேட்குறியா... first  நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

மதி சொன்னதைக் கேட்க கேட்க கயல்விழிக்கு ஒன்று மட்டும் புரிந்தது... இங்கிருந்து தப்பிக்க வேண்டுமெனில், இனி விளையாட வேண்டியது விதி அல்ல.. தான் தான் என்று...  

சக்கரம் சுழலும்..!!!!
-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.


Monday, 4 March 2013

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது...

நம்முடைய வாழ்க்கையில்  எத்தனையோ முக்கியமான நபர்களுடன் வாழ்ந்திருக்கிறோம்... சிலரை சந்தித்து இருக்கிறோம்... அப்படிப்பட்ட முக்கியமான ஒரு நபரைப் பற்றிய கவிதைப் படைப்பு இது...

"தொள்ளாயிரத்து

தொண்ணூற்று ஒன்பது...!!!"



கண்ணு ஓரங்கலயே...
தூக்கம் பிடிக்கலயே...
நட்டநடு இராத்திரியில
உம்ம பத்தி நெனப்பு வர,
உசுரு இங்க உருகுதைய்யா....

நெனவு தெரிஞ்ச நாள்
முதல்லா ஒரு நாளும்
நீர் என்னக் கொஞ்சலயே...!!!

உம்ம பேத்திய நீர்
கொஞ்சயில, பொறாமத் தீ
எங்கிட்ட கொழுந்துவிட்டு
எரியுதைய்யா.....!!!

மாங்கா அடிச்சு
பறிக்கையில,
நீர் பார்த்து அடிச்ச தடம்
இன்னும் இங்க மறையலயே....

ஒரு பானை சோத்தத்தான்
சட்டியோட நான் உடைக்க,
நீ பார்த்த பார்வையில
என்னத் தொட்ட பயம்
இன்னும் என்ன விட்டு
போகலயே....

நீர் கொடுத்த மச்சு வீடு
எனக்கொன்னும் வேணாமய்யா....
எம்மனசு நெறஞ்சிருக்க,
உம்மனசோரம் ஒரு
குடிசை போட்டுத்
தாருமய்யா....

நீர் சிரிச்சு நான் பார்த்ததில்ல..
நீர் அழுததா ஊரான்
எவனும் சொன்னதில்ல...
உம்ம நெனக்கையில
மரியாதை பொங்குதய்யா..
ஆனா இந்த பாசமென்னும் மண்ண
மட்டும் எம்மனசு காணலயே...

"என்ன பெத்த ஐயாவுக்கு......"
ஒத்த வரி கடிதமா
நான் எழுதி வச்சதெல்லாம்
எம்பெட்டியில உறங்குதய்யா...
இத்தோட 'தொள்ளாயிரத்து
தொண்ணூற்று ஒன்பது'னு
எங்கணக்கு சொல்லுதய்யா...

"என் செல்ல மகளே...!!!"னு
ஒரு வார்த்த சொல்லுமய்யா...
உசுரு இருக்க மட்டும்,
அது எனக்கு போதுமய்யா...!!!!

-ஷோபனா கோபாலகிருஷ்ணன்.

Monday, 25 February 2013

யாரிவன்???!!!...


நம்முடைய தேடல்கள் சில நேரங்களில் முடிவதில்லை.... அதே போல் தான் என்னுடைய ஒரு தேடல்  இங்கே உங்கள் பார்வைக்கு... !!!!


யாரிவன்???!!!...





கோபியர் தம் விழிகளிலே
கண்டவுடன் மயங்கி விடும்
கண்ணனுமல்ல.....!!!

கையில் வாளேந்தி
சைன்யத்தை நோக்கி
வீரநடை போடும்
சூரனுமல்ல...!!!

தேறார் கண்டால்
அஞ்சி நடுங்கி, ஒடுங்கி
ஓடுபவனுமல்ல.....

ஆக்கியானமும், வீண்
பேச்சும் பேசித்திரியும்
அலப்பனுமல்ல....!!!

மாற்றான் அழகாரம்
கேட்டு, பித்தேறி
மதிகெட்டுத் திரியும்
கறுவமானவனுமல்ல....!!!

காலம் கொணர்ந்திடும்
சோதனை கண்டு
அறிவறை கொண்டு
திரிபவனுமல்ல.....!!!

எந்தன் சயனத்திலொரு
குழலிழை கண்டும்
காணமல் போகும்
ஆதனுமல்ல....!!!

ஆயிரம் ஆயனங்கள்
வாழ்ந்தாலும், அரனைப்
போற்றிப் பாடும்
பாணனுமல்ல...!!!

இவன், கெஞ்சினால்
மிஞ்சுவதுமில்லை...
மிஞ்சினால் கெஞ்சுவதுமில்லை...!!!

பின் யாரிவன்????
புரியாத புதிராய்??!!!!
தெரிந்தால் கொஞ்சம்
சொல்லுங்கள்.....,
புதிருக்கான விடையை...!!!!!

-ஷோபனா கோபாலகிருஷ்ணன்

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

சைன்யம்- பெரும்படை
தேறார்- பகைவர்
ஆக்கியானம்-கட்டுக்கதை
அழகாரம்-புகழ்ச்சொல்
கறுவமானவன்- வெகுளி
அறிவறை-மனத்தடுமாற்றம்
சயனம்-படுக்கை
குழலிழை-மயிரிழை
ஆதன்- குருடன்
ஆயனங்கள்-நாட்கள்/வருடங்கள்
அரன்-சிவன்
பாணன்-பாடகர்