“இவள் உன்னைப்போலவே
இருக்கிறாள் “ என்ற
முதல் பொய்யில் தொடங்குகிறது
என்னுடைய பிரவேசம்
இவ்வுலகில்....
“நிலவில் பாட்டி இருக்கிறாள்”
என்ற அடுத்த பொய்யில்
உருண்டோடுகிறது ,
ஒரு கவளச் சோறு,
தொண்டைக்குழி தாண்டி....
“அன்னமிட்டால் குட்டி
ஈனும்” என்ற
தொடர்ச்சியான பொய்யில்
மயில் இறகு வளர்க்கப்படுகிறது
என் புத்தகப் பொதியில்....
“நன்றாக” ஆடுகிறாய், பாடுகிறாய்,
எழுதுகிறாய் என்ற
பொய்யின் நம்பிக்கையில்
தொடர்கிறது நம்முடைய
அடுத்த முயற்சிகள்....
விழித்திரையில் வண்ணக்கோலமிட்டு
காட்சி மாறும் திரைப்படம் கூட
பொய்யென அறிய
பதினைந்து வருடம் பிடித்தது
எனக்கு....
சரியான பொய் தவறல்ல,
நம்பிக்கையான பொய் தளர்ச்சியல்ல,
காப்பாற்றும் பொய் கைவிடுவதற்கல்ல,
மகிழ்ச்சியான பொய் துக்கமல்ல,
ஆனால், பொய் நிலையானதுமல்ல.....
அதனால் தானோ உலகம்
நிதமும் நிலைகொள்ளாமல்
சுழல்கின்றது...???
ஆம்... நம் உலகம் பொய்யால் ஆனது...
நாம் அதன் துணுக்குகள்...
பொய்களை நமக்குள் புதைத்து விட்டு ,
இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா
உண்மைகளை தன்னுள் மறைத்து
விளையாட்டுக் காட்டுகிறது,
உனக்கும் எனக்கும்....
தேடாமலே பொய்கள்
இங்கு வாரி வழங்கப்படும்....
தேடினாலும் புலனுக்கு
எட்டா ஒன்றாய்
உண்மை மறைக்கப்படும்.....
மானிடா,
ஒரே ஒரு உண்மை சொல்..
“நீ யார்?” – விடை உன் பெயரல்ல..
உன் பெயர்கூட பொய்தான்....
அது நீயன்று....
உலகமெனும் பொய்யுருண்டையின்
நகைப்பொலி கேட்கிறதா...??
விரைந்திடு விடை காண...
இல்லையேல்,
நீயும் எளிதில் கிடைக்கும்
பொய்யாக மாற்றப்படுவாய்....
- -ஷோபனா கோபாலகிருஷ்ணன்

