Monday, 25 February 2013

யாரிவன்???!!!...


நம்முடைய தேடல்கள் சில நேரங்களில் முடிவதில்லை.... அதே போல் தான் என்னுடைய ஒரு தேடல்  இங்கே உங்கள் பார்வைக்கு... !!!!


யாரிவன்???!!!...





கோபியர் தம் விழிகளிலே
கண்டவுடன் மயங்கி விடும்
கண்ணனுமல்ல.....!!!

கையில் வாளேந்தி
சைன்யத்தை நோக்கி
வீரநடை போடும்
சூரனுமல்ல...!!!

தேறார் கண்டால்
அஞ்சி நடுங்கி, ஒடுங்கி
ஓடுபவனுமல்ல.....

ஆக்கியானமும், வீண்
பேச்சும் பேசித்திரியும்
அலப்பனுமல்ல....!!!

மாற்றான் அழகாரம்
கேட்டு, பித்தேறி
மதிகெட்டுத் திரியும்
கறுவமானவனுமல்ல....!!!

காலம் கொணர்ந்திடும்
சோதனை கண்டு
அறிவறை கொண்டு
திரிபவனுமல்ல.....!!!

எந்தன் சயனத்திலொரு
குழலிழை கண்டும்
காணமல் போகும்
ஆதனுமல்ல....!!!

ஆயிரம் ஆயனங்கள்
வாழ்ந்தாலும், அரனைப்
போற்றிப் பாடும்
பாணனுமல்ல...!!!

இவன், கெஞ்சினால்
மிஞ்சுவதுமில்லை...
மிஞ்சினால் கெஞ்சுவதுமில்லை...!!!

பின் யாரிவன்????
புரியாத புதிராய்??!!!!
தெரிந்தால் கொஞ்சம்
சொல்லுங்கள்.....,
புதிருக்கான விடையை...!!!!!

-ஷோபனா கோபாலகிருஷ்ணன்

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:

சைன்யம்- பெரும்படை
தேறார்- பகைவர்
ஆக்கியானம்-கட்டுக்கதை
அழகாரம்-புகழ்ச்சொல்
கறுவமானவன்- வெகுளி
அறிவறை-மனத்தடுமாற்றம்
சயனம்-படுக்கை
குழலிழை-மயிரிழை
ஆதன்- குருடன்
ஆயனங்கள்-நாட்கள்/வருடங்கள்
அரன்-சிவன்
பாணன்-பாடகர்

ஐந்து நிமிடம்...!!!

கவிதையில் என்னுடைய ஒரு முயற்சி... இதோ உங்கள் பார்வைக்கு... என்னுடைய முயற்சியின் நிறை, குறைகளை என்னுடைய நண்பர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்...

ஐந்து நிமிடம்...!!!






எழ மறுக்கும் கால்களை
வலிய எழுப்புகிறேன்...
என் முன்னே நான்????..
மனம் சிரிக்கிறது....
"மடையா! கண்ணாடி
முன்னே நீ!!!", என்று...


அரண் போலொரு சுவர்,
என்னைச் சுற்றி....
வெளிசெல்ல கதவுகளுமன்று...
தப்பிச்செல்ல சாரளமுமன்று...
நேரம் நகர்கிறது...
நாட்கள் ஓடுகின்றன...


கண்ணாடியுடனும் ,
சுவருடனும்
பேசிப் பேசி அலுத்துவிட்டது...
மனிதர்களுடன் கொஞ்சம்
பேசலாமே....!!!!


சுற்றும் முற்றும்
பார்க்கிறேன்....
சுவர்கள் மறைகின்றன....
ஆங்காங்கே கற்சிலைகளாய்
மனிதர்கள்...???!!!!
கடந்து விட்டேன்.....

திடீரென மனதிலொரு ஐயம்??!!!
கடந்து போனது நானா????
அல்லது கற்சிலைகளா????....

கற்சிலைகளே!!!
நீங்கள் கடப்பதும் நடப்பதும்
சாத்தியமென்றால்,
பேசுவதும் சாத்தியம் தானே???!..

பேசிவிட்டுப் போங்கள்
ஒரு ஐந்து நிமிடம்...
நானும் கற்சிலையாக
மாறாமல் இருக்க....!!!!

- ஷோபனா கோபாலகிருஷ்ணன்

Wednesday, 6 February 2013

காலச்சக்கரம்-I


காலச்சக்கரம்-பகுதிI



“ஏய் மதி... எவ்வளவு நேரம்  காட்டுக்குள்ளேயே சுத்த வைப்ப.. கால் வலிக்குது... atleast  எங்க இருக்கோம்னாவது சொல்லு.. இதுல பைனாகுலர்ல ரொம்ப நேரமா எதையோ பாக்குற மாதிரி scene வேற.”  எரிச்சல் தாங்காமல் கத்தியே விட்டேன்... மதி பொறுமையாக திரும்பி “அமைதியா இரு” என சொல்லி விட்டு மறுபடியும் பைனாகுலரில் பார்க்கத் தொடங்கினான்.... காட்டின் ஒருபுறம் கடல் , மறுபுறம் ஏதோ கோட்டை போல் பெரிய மதில் இருந்தது... மதி கடல் புறம் பார்த்துக் கொண்டிருந்தான்...பெண்கள் யாராவது குளிப்பதை பார்க்கிறானோ என்று சந்தேகம் வந்து விட்டது... நானும் அவன் பார்க்கும் புறம் திரும்பிப் பார்த்தேன்... ஒன்றும் தெரியவில்லை...அவன் தலையில் நச்சென்று ஒரு குட்டு குட்டினேன்...
“அங்க என்ன பாக்குற?”
“இல்லை கயல், யாராவது தெரியுராங்களானு பாக்குறேன்”
“ஏன்?? அதை இந்த சைடு பாக்கக் கூடாதா??”
“ஓ, பாக்கலாமே” என சொல்லி கோட்டை இருந்த புறம் திரும்பி பைனாகுலரில் பார்க்கத் தொடங்கினான்...

அவனைக் கொலை பண்ணி விடலாமா என்று எண்ணும் அளவுக்கு கோபம் வந்தது..... நேற்று இந்நேரம் வீட்டில் என் சமையலைக் குறை சொல்லி என்னுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.... இப்போது நினைத்துக் கொண்டேன்.. “இந்த காட்டுக்குள் அந்த சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி அலைவதை.... வீட்டுக்கு வரட்டும் ரெண்டு நாளைக்கு சாப்பாடு போடாம சுத்த விடுறேன்...”  ...

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று காலை “நாம ஒரு இடத்திற்கு டூர்  போறோம்  , கிளம்பு..” என்று கூல் ஆக சொல்லிவிட்டுப் போய் விட்டான்... “முன்னறிவிப்பு இன்றி ஒரு பெண்ணைக் கிளம்பச் சொன்னால் எப்படி உடனே கிளம்ப முடியும்..... டூர்க்கு அட்லீஸ்ட் லைட் ஆ மேக்கப் ஆவது போட வேணாமா.... கூட வரவங்க என்ன நினைப்பாங்க... மவனே அடுத்த ஜென்மத்துல நீயும் பொண்ணா பொறந்து இதே மாதிரி அவஸ்தைபடணும்” மனசுக்குள்ளே சாபம் விட்டுக் கொண்டு அவனுக்கும் சேர்த்து நானே துணிமணிகளை எடுத்து வைத்தேன்... அறைக்குள் வந்தவனை முறைத்துப் பார்த்தேன்...

“நீ என்ன நினைக்குறனு தெரியும்... இருக்கற மேக்கப் போதும்.. கிளம்பு... இந்த டூர்க்கு மேக்கப் தேவையே இல்லை”
“ அப்படினா மறுபடியும் ஆளே இல்லாத இடத்துக்கு தான் கூட்டிட்டு போறியா??? நான் என்ன உனக்கு எக்ஸ்பெரிமென்ட் எலியா??? ”
“சீ சீ, இந்த டூர் உனக்கு ரொம்ப பிடிக்கும், த்ரில்லிங் ஆ இருக்கும்.. ப்ராமிஸ்”
“உன் த்ரில்லிங் பத்தி எனக்கு தெரியாதா.... எந்த ஊர்லயோ கடல்ல வித்தியாசமா மீன் இருக்குனு சொல்லி கூட்டிட்டு போய் கடல்ல தள்ளி விட்டவன் தானா நீ.... ஏதோ நீச்சல் தெரிஞ்சதால எஸ்கேப் ஆனேன்... இல்லனா என் கதி????!!!”

காலையில் சண்டைப் போட்டது இன்னும் அப்படியே நினைவில் இருந்தது... மாலை நெருங்கி கொண்டிருந்தது.... என்ன பண்ண முடியும், நமக்கு குடுத்து வச்சது அவ்வளோ தான் என நினைத்துக் கொண்டேன்... என்ன தான் மதியை குறை சொன்னாலும் மற்றவர்கள் கேட்கும் போது உலகத்தில் உத்தமன் அவனைப் போல் யாரும் இல்லை என்று மற்றவர்கள் நம்பும் அளவுக்கு கூறிவிடுவேன்... கணவனே கண்கண்ட தெய்வம்... அது தானே தமிழர் பண்பாடு!!!!

ரொம்ப நேரமா நாமளும் வெட்டியா தான் இருக்கோம், ஏதாவது பண்ணலாம்  என கேமராவை எடுத்து கிளிக்கத் தொடங்கினேன்... அப்படியே நகர்ந்து சிறிது தொலைவு வந்துவிட்டேன்.... தூரத்தில் குடிசை ஒன்று தெரிந்தது... சரி, பக்கத்துல போய் கொஞ்சம் தண்ணியாவது வாங்கிக் குடிக்கலாம் என நடக்கத் தொடங்கினேன்... அதற்குள் குடிசைக்கு வெளியே யாரோ வந்து நிற்க , உள்ளே இருந்து ஒரு பெண் வெளியே வந்து அவனுடன் பேசத் தொடங்கினாள். குடிசையை கிட்டத்தட்ட நெருங்கி நடந்து கொண்டிருந்த நான் அப்படியே உறைந்து நின்று விட்டேன்... மதி சொன்ன த்ரில்லிங் இது தானா??? கடவுளே இவன் ஏன் இப்படி பண்றான்.. இப்போதே இங்கிருந்து கிளம்ப வேண்டும் ..... மதி எங்க இருக்க???? என் கால்கள் தானாக பின்னோக்கி நடக்கத் தொடங்கின.....
 ------------------------------------------------------------------------------------------------------------

ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த கருணாகர பல்லவனை (இளைய பல்லவன்) யோசனையுடன் நோக்கிக் கொண்டிருந்தான் அஷய முனையின்  (அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி)  கோட்டைத் தலைவன்..

“என்ன யோசனை தலைவரே???” எனக் கேட்டான் இளைய பல்லவன்.
“இந்த முடிவுக்கு மக்கள் ஒத்துக் கொள்வார்களா??”
“ஏற்கனவே அவர்கள் எனக்கு சாதகமாகத் தான் பேசுகிறார்கள்.அதனால் எந்த வித தயக்கமும் இன்றி நீங்கள் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கலாம் “
“ இல்லை பல்லவரே!!! கடற்கரையில் வசிக்கும் கொள்ளைக் கூட்டத்தாரை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது”
“அவர்கள் எப்போதோ என் பக்கம் வந்தாகி விட்டார்கள்.. இப்போதே கோட்டையை பலப்படுத்த வேண்டிய காரியங்களை ஆரம்பிக்கிறேன்... இன்றிலிருந்து ஐந்தாவது நாள் இங்கு நடக்க வேண்டிய விழா சிறப்பாக நடைபெறும்.. நீங்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்தால் மட்டும் போதும்...கவலையை விடுங்கள்..”
கோட்டைத் தலைவனின் முகத்தில் நிம்மதி ரேகை படர்ந்த அதே சமயம், கதவு படபடவென தட்டப்படும் ஓசை கேட்டது. இளைய பல்லவன் வேகமாக எழுந்து கதவைத் திறந்தான். வீரர்கள் இருவர் தலை வணங்கினர்.
“முக்கியச் செய்தி.. கோட்டைத் தலைவரைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினர்.
“இன்று முதல் நான் தான் இக்கோட்டைக்கு உபதலைவன். என்னிடமே கூறலாம்” என்றான் இளைய பல்லவன்.

இரு வீரர்களும் கோட்டைத் தலைவனைப் பார்த்தனர். தலைவர் தலையசைக்கவும் வீரர்கள் செய்தியை பல்லவனிடம் கூறி விட்டுச் சென்றனர்.செய்தியைக் கேட்ட இளைய பல்லவன் கோட்டைத் தலைவனிடம் விடை பெற்று வேகமாக தன்னுடைய அறைக்கு திரும்பினான். அடுத்து தான் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதை மனதிற்குள் திட்டமிட்டு துரிதமாக செயல் பட ஆரம்பித்தான். அறைக்கு வெளியே காவல் இருந்த வீரர்களை அழைத்தான். தன்னுடன் அஷய முன்னைக்கு அழைத்து வந்த முக்கியமான இருவரை ரகசியமாக அழைத்து வருமாறு கூறிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஒரு வருடத்திற்கு முன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய அருள்மொழித்தேவன் மற்றும் ராஜாந்திரி இருவரும் தன் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று சிந்தித்துப் பார்த்தான். வாள் போரில் மட்டுமே வல்லவனாக இருந்த பல்லவனை இன்று கடற்போரிலும் வல்லவனாக மாற்றிய பெருமை இவர்கள் இருவரையே சேரும். இளைய பல்லவன் சோழ நாட்டின் முக்கிய படைத்தலைவர்களுள் ஒருவன்... இளைய பல்லவனின் உடம்பில் இருக்கும் வடுக்களே அவன் போர் திறனுக்கு சாட்சி...  அவன் நெற்றியில் இருக்கும் தழும்பு அவன் முகத்திற்கு இன்னும் கம்பீரத்தை அளித்தது.... அவன் புகழ் சீன தேசம் வரை பரவி இருந்ததில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை... ராஜாந்திரி சீன அடிமையாக இருந்து பின்னர் கடற்போர் கற்றவன்.. குறுவாட்களை குறி பார்த்து எறிவதில் வல்லவன்... அவனது இடைக்கச்சையில் எப்பொழுதும் குறுவாட்கள் அணிவகுத்து நிற்கும்.. அருள்மொழித்தேவன் இளைய பல்லவனின் உயிர் நண்பன்... வில்வித்தையில் இவனை மிஞ்ச முடியாது.... ஐந்து காத தூரம் வரை இருக்கும் எதையும் இவன் வில்லால் வீழ்த்த முடியும்...

 இளைய பல்லவன் அஷய முனைக்கு வந்த காரணம், அந்த பகுதியை தன் வசபடுத்திக் கொள்ளவே.. அதற்கான முக்கிய காரணம், அப்பகுதியில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அஷய முனையை கடந்து தான் வர வேண்டும்... எனவே அஷய முனைக்கு வரும் கப்பல்களை எளிதாக கைவசப் படுத்திக் கொள்ள முடியும்... நிலத்தில் வழுவாக காலுன்றி இருக்கும் சோழ பேரரசு கடல் பகுதியிலும் வழுவாக காலுன்ற வேண்டும் என இளைய பல்லவன் விரும்பினான்.... எனவே தனக்கு நம்பிக்கையான அருள்மொழித்தேவன் மற்றும் ராஜாந்திரியை தன்னுடன் அழைத்து வந்திருந்தான்...

சிந்தனை வயப்பட்டிருந்த இளைய பல்லவன் அருள்மொழித்தேவன் மற்றும் ராஜாந்திரி தன்னுடைய அறைக்குள் நுழைவதை கண்டதும் சிந்தனையிலிருந்து விடுபட்டு அவர்களை ஆசனத்தில் அமருமாறு கூறினான்...
“ அனைத்தும் நம் திட்டப்படி தானே நடக்கின்றன?? அயல் நாட்டு ஒற்றர்கள் யாரும்  நுழையவில்லையே???” எனக் கேட்டான் இளைய பல்லவன்..
“ இல்லை பல்லவரே.... கோட்டைக்கு வலப்புறம் இருக்கும் பகுதி ஏற்கனவே அருள்மொழித்தேவன் வசம் வந்து விட்டது... இடப்புறம் இருக்கும் காட்டுப் பகுதியின் காவல் என் வசம் வந்து விட்டது, கடல் பகுதியில் இருந்து வரும் தாக்குதல்களை நமது மாலுமிகள் பார்த்துக் கொள்வார்கள்.. கடல் புறம் வசிக்கும் கொள்ளை கூட்டத்தாரில் முக்கியமான சிலருக்கும், கோட்டைக்குள் இருக்கும் மக்களுக்கும் இன்று முதல் போர் பயிற்சி ரகசியமாக அளிக்க ஏற்பாடாகிவிட்டது” என பதிலளித்தான் ராஜாந்திரி.
“ம்.. நல்லது ராஜாந்திரி ....” என பல்லவன் கூறிக் கொண்டிருக்கும் போதே ஒரு புறா பறந்து வந்து பல்லவனின் மடியில் விழுந்தது...

“அட , கோட்டைக்குள் தலைவர் புறாக்களைக் கூட வளர்க்கிறாரா??” என்று கேட்ட அருள்மொழித்தேவனிடம் “இல்லை அருள்மொழித்தேவா, இது தூதுப் புறா...” என்றான் இளைய பல்லவன்.... ஆச்சர்யத்துடன் அதைப் பார்த்த அருள்மொழித்தேவன் “தூதுப் புறா என்றால் தூது இருக்க வேண்டுமே, கால்களில் எந்த செய்தியும் கட்டப்படவில்லையே??!!! அதுவும் இவ்வளவு பெரிய புறாக்களை நான் எங்கும் பார்த்ததில்லை...” என சந்தேகத்துடன் கேட்டான். “இது ராஜாந்திரியால் தூதுக்காக பயிற்சி அளிக்கப்பட்ட புறா” என கூறிவிட்டு இளைய பல்லவன் புறாவின் சிறகுகளுக்குள் மெதுவாக கையை வைத்து தேடத் தொடங்கினான்.. சிறிது நேரத்தில் மெல்லிய பட்டுத் துணியாலான செய்தி கிடைத்தது.... (அக்காலத்தில் சீனக் கொள்ளையர்கள் புறாவின் சிறகுகளுக்குள் செய்தியை வைத்து தூது அனுப்பும் முறையைக் கையாண்டனர். அப்புறாக்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை) 

செய்தியைப் படித்த பல்லவன் அதை அருள்மொழித்தேவன் மற்றும் ராஜாந்திரியிடம் காண்பித்தான்... அருள்மொழித்தேவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன..  இவ்வளவு சிறிய பட்டு துணியில் சிறிய எழுத்துகளால் எழுதப்பட்ட செய்தியைக் கண்டு... செய்தியைப் படித்த ராஜாந்திரி “ பல்லவரே, இன்று நல்ல வேட்டை காத்திருக்கிறது...நான் விடை பெற வேண்டிய வேளை வந்து விட்டது... வெற்றியுடன் வருகிறேன்...” என்று கூறி வேகமாக அறையை விட்டு வெளியேறினான்...

------------------------------------------------------------------------------------------------------------

வேகமாக மதியை தேடி நடக்க ஆரம்பித்தேன்... கிட்டத்தட்ட நாங்கள் பிரிந்த இடத்தை அடைந்து விட்டேன்.. ஆனால் அங்கு மதியைக் காணவில்லை.... நிச்சயமாக பக்கத்துல தான் எங்கயாவது இருப்பான்.... இன்னும் கொஞ்ச தூரம் போய் தேடி பாக்கலாம்.... காலையில் கிளம்பியதில் இருந்து இப்பொழுது வரை அனைத்தும் விசித்திரமாகவே தோன்றியது எனக்கு...
காரில் ஏறியதும் “ கண்ணைக் கட்டி கொள்... 10 நிமிடத்தில் டூரிஸ்ட் ஸ்பாட் வந்துடும் “என்றான் சிரித்துக் கொண்டே...
அப்பொழுதே உஷாராகி இருக்கணும்...
எப்பவும் போல் ஆர்வத்தில் “ என்ன மாயாஜாலம் செய்யப் போறியா.. அவளோ பக்கத்துல எந்த டூரிஸ்ட் ஸ்பாட்டும் இல்லையே” என கேட்டுக் கொண்டே  கண்ணைக் கட்டிக் கொண்டேன்...
சொன்னது போலவே 10 நிமிடத்தில் ஸ்பாட் வந்துவிட்டது.... ஆனால் டைரக்ட்டா காட்டுக்குள் நின்று கொண்டிருந்தோம்... காரைக் காணவில்லை...

“மதி, கார் எங்க???”
“அது இருக்க வேண்டிய இடத்துல இருக்கு.... நீ கவலைப்படமா வா”
“சரி, எப்பவும் எதையாவது தேடிக்கிட்டு தானா கூட்டிட்டு வருவ.. இந்த காட்டுக்குள்ள என்ன தேட வந்திருகோம்???”
“ அதெல்லாம் ஒண்ணும் இல்லை....சும்மா என்ஜாய் பண்ண தான்”
“ யாரு ?? நீ என்ஜாய் பண்ண கூட்டிட்டு வந்தியா??? காதுல யாராவது பூ வச்சுருப்பாங்க, அவங்க கிட்ட போய் சொல்லு... ஹானிமூனுக்கு காசிக்கு கூட்டிட்டு போனவன் தானா நீ...”
“ சரி சரி, புலம்பாம வா... நீயே சீக்கிரம் தெரிஞ்சுப்ப இந்த இடத்தை பத்தி..”
இப்படியே காலையிலிருந்து சமாளித்துக் கொண்டே வந்தான்.. ஆனால் இடத்தின் பேரை மட்டும் சொல்லவே இல்லை... ஆனால் இப்பொழுது ஓரளவு உகித்துவிட்டேன் இந்த இடத்தை பற்றி....

இதோ ஒரு வழியாக கண்ணில் பட்டுவிட்டான்... ஒரு மரத்தின் அருகில் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.. பின்னர் எதையோ கையில் எடுத்தான்... இதோ அவனை நெருங்கி விட்டேன்....
“மதி, என்ன இது???’”
“உஷ்... கத்தாத கயல்.... இது ஏதோ முத்து” ஒரு சிறிய பையிலிருந்து முத்துக்களை எடுத்துக் காட்டினான்..
“அதெல்லாம் இருக்கட்டும் .. உடனே இங்க இருந்து கிளம்பணும்... இங்க நாம இருக்கறது சரியா படல...”
“ஏன்??? என்ன ஆச்சு??”
நான் குடிசையையும், அங்கு பார்த்ததையும் சொன்னேன்.. மதிக்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது...
“ அவங்க உன்னைப் பாத்தாங்களா கயல்???”
“தெரியல...பட் எப்படி இருந்தாலும் இப்ப நாம மாட்டுவோம்...”
“என்ன சொல்ற??”
“இந்த முத்து இருக்கற பைய தொலைச்சவன் தேடி வந்து தானா ஆகணும்... அப்போ  நாம இங்க இருந்தா மாட்டுறது உறுதி....” நான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது...  
“இன்னைக்கு தான் உருப்படியா யோசிச்சு இருக்க... சீக்கிரம் வா... மரத்துக்குப் பின்னால மறைஞ்சுகலாம்” என சொல்லிக் கொண்டே வேகமாக கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான் மதி.. இருவரும் ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டோம்...

எனக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது.... அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவனுடன் போய் கொண்டிருந்தேன், வருகிற ஆபத்து தெரியாமல்... சத்தம் மிக அருகில் கேட்டது... எனக்கு இதய துடிப்பு நின்று விடும் போல் இருந்தது... சட்டென்று சத்தம் நின்று விட்டது.... சிறிது நேரம் எந்த சத்தமும் இல்லை... இப்போது தான் உயிரே வந்தது....
“மதி, அவங்க போயிட்டாங்க..” என மதியின் புறம் திரும்ப, அவன் பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தான்...
“என்ன ஆச்சு??? ஒரு மாதிரி இருக்க??”
மதி பதிலேதும் சொல்லாமல் கையை மட்டும் நீட்டினான்.
அவன் கை நீட்டிய திசையில் பார்ப்பதற்குள் ஒரு கத்தி வேகமாக இருவருக்கும் இடையே வந்து மரத்தில் குத்திட்டு நின்றது.... கத்தி வந்த திசையை நோக்கிய நான் அசைவற்று நின்று விட்டேன்....

சக்கரம் சுழலும்!!!!!

-ஷோபனா கோபாலகிருஷ்ணன்